யு.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில் பதிவு செய்தல்

புகலிட நடைமுறையின் முதல் படி, பதிவு ஆகும். பதிவு செய்வது என்பது UNHCR-க்கு சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்களைப் பதிவுசெய்தல், சரிபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகும்.

பதிவுக்கு விண்ணப்பிக்க, மலேசிய அகதி (Refugee Malaysia) இணையதளத்தில் கிடைக்கப்படும் புதிய பதிவுப் படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில்(online) சமர்ப்பிக்கவும்.

உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்தவுடன், சந்திப்பு தொடர்பாக UNHCR உங்களைத் தொடர்புகொள்வதற்கு தயவுசெய்து காத்திருக்கவும். அனுப்பப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் செயலாக்கப்படும் ஆனால் அதிக எண்ணிக்கையிலான சமர்ப்பிப்புகள் காரணமாக, UNHCR உடனடியாக பதிலளிக்க முடியாது. நீங்கள் ஏற்கனவே ஒரு சந்திப்புக் கோரிக்கையை அனுப்பியிருந்தால், தயவுசெய்து வேறொன்றை அனுப்ப வேண்டாம்.

UNHCR-உடன் நியமனம்

சந்திப்பு தேதி தொடர்பாக UNHCR மலேசியாவால் உங்களைத் தொடர்பு கொண்டவுடன், உங்கள் சந்திப்புக்குத் தயாராகலாம். புகலிடம் கோரும் அனைத்து நபர்களும் (குடும்ப உறுப்பினர்கள் மற்றும்/அல்லது வேறு ஏதேனும் சார்ந்திருப்பவர்கள் உட்பட) உங்கள் பதிவு சந்திப்புக்கு வருகை தர வேண்டும். பதிவு செய்யும் போது நீங்கள் சரியான, உண்மையான மற்றும் முழுமையான தகவல்களை வழங்குவது முக்கியம். முழுமையற்ற அல்லது தவறான தகவல் உங்கள் வழக்குக்கு தீங்கு விளைவிக்கும்.

உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், உங்களுடன் மலேசியாவில் உள்ளவர்கள் அல்லது உலகில் வேறு எங்காவது உள்ளவர்கள் உட்பட, அனைவரின் விவரங்களையும் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து குடும்ப உறுப்பினர்கள் என்பது சட்டரீதியாக அல்லது வழக்கப்படி தத்தெடுக்கப்பட்டவர்களை அடங்கும். குடும்ப உறுப்பினர்கள் என்று கருதப்படுபவர்கள் பெற்றோர்கள் (உயிரியல் மற்றும்/அல்லது தத்தெடுக்கப்பட்டவர்கள்), சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் (உயிரியல், ஒன்றுவிட்ட,மாற்றாந்தாய், தத்தெடுக்கப்பட்டவர்கள்), குழந்தைகள் (உயிரியல், வளர்ப்பு, மாற்றாந்தாய் மற்றும் முந்தைய திருமணம் அல்லது ஒரு உறவிலிருந்து பெற்றவர்களை) அடங்குவர். பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் ஒரு கோப்பு எண்ணைப் பெறுவார்கள். அலுவலகத்துடனான அனைத்து தகவல்தொடர்புகளுக்கும் கோப்பு எண்ணைக் குறிக்க வேண்டும்.

பதிவு செய்தவுடன், உங்களுக்கு UNHCR அட்டை அல்லது செல்லுபடியாகும் தேதி உள்ள(Under Consideration)(UC) ஒரு ஆவணம் வழங்கப்படும். உங்களின் UNHCR அட்டை அல்லது UC ஆவணத்தை புதுப்பிக்க அது காலாவதியாகும் தேதியில் UNHCR-ஐ அணுகவும்.

கோவிட்-19-ஐ கருதி: ஆவணத்தைப் புதுப்பிப்பதற்காக UNHCR உங்களை அழைக்கும் வரை காத்திருக்கவும். எந்த முன்பதிவு சந்திப்பு இல்லாமல் UNHCR-ஐ அணுக வேண்டாம்

தேவையான ஆவணங்கள்

கடவுச்சீட்டு, அடையாள ஆவணங்கள், திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், குடும்பக் கணக்கெடுப்பு அல்லது தேசிய அடையாள ஆவணம், இராணுவச் சேவைக் கையேடுகள், மருத்துவச் சான்றிதழ்கள், மற்றொரு UNHCR அலுவலகம், UNRWA அலுவலகம் அல்லது வெளிநாட்டு அரசாங்கத்தில் முந்தைய பதிவு செய்ததற்கான ஆதாரங்கள் உட்பட, உங்கள் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வாருங்கள்.

UNHCR வழங்கிய UNHCR அடையாள அட்டை, UC ஆவணம், முன்பதிவு சந்திப்பு அட்டை மற்றும் பரிந்துரை கடிதம் போன்ற ஆவணங்களை உங்கள் சந்திப்பு தேதியில் கொண்டு வாருங்கள். மலேசிய UNHCR அலுவலகத்தைத் தவிர மற்ற UNHCR அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட எந்தவிதமான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

உங்கள் குழந்தையை பதிவு செய்தல்

நீங்கள் புதிதாக ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், நீங்கள் அவருடைய பிறப்பைப் பதிவுசெய்து, அரசாங்கத்தின் தேசியப் பதிவுத் துறையில் (National Registration Department)(NRD) பிறப்புச் சான்றிதழைப் பெற வேண்டும். குழந்தை பிறந்த 60 நாட்களுக்குள் இதைச் செய்தால் NRD-யில் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை இருப்பினும், 60 நாட்களுக்குப் பிறகு, தாமதமாகப் பதிவு செய்தால் உங்களிடம் கட்டணம் விதிக்கப்படலாம்.

UNHCR ஆவணம்

சர்வதேச பாதுகாப்பு தேவை என UNHCR-இன் செயலாக்கத்தின் மூலம் பதிவுசெய்யப்பட்ட நபர்களுக்கு UNHCR ஆவணங்கள் வழங்கப்படும், இது ஆவணத்தில் குறிக்கும் பெயரை கொண்டவர் UNHCR-இன் பாதுகாப்பில் இருப்பதாகக் கூறுகிறது.

UNHCR அடையாள ஆவணங்கள் ஒரு அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது, இது கைது செய்யப்படுவதன் ஆபத்தை குறைக்கலாம் மற்றும் UNHCR, அதன் கூட்டாளர் நிறுவனங்கள் அல்லது பிற சார்புடையவர்களிடமிருந்து சுகாதார சேவைகள், கல்வி மற்றும் பிற அத்தியாவசிய ஆதரவு சேவைகளுக்கு வரையறுக்கப்பட்ட அணுகலை அனுமதிக்கும்.

UNHCR ஆவணம் என்பது நீங்கள் UNHCR பாதுகாப்பில் இருப்பதை அங்கீகரிக்கும் அடையாள ஆவணமாகும். மலேசியாவில் இதற்கு முறையான சட்ட மதிப்பு இல்லை மற்றும் கடவுச்சீட்டு அல்ல.